தலப்பாடல்கள்

திரு.Dr க.முருகையா அவர்களால் செம்பியன்பற்று பாலையடி வைரவக் கடவுளைப் போற்றித் துதித்துப் பாடிய பாடல்கள்.

படைத்திடுங் கடவுள் தன்னின்
பாங்குடைச் சிரமதைந்தில்
புடைபடவொன்றைக் கிள்ளிப்
பூமிக்கு விரைந்து வீசும்
படை பலவுடைய வீர
பார்வையில் கரி வாள் சூலம்
கொடையெனத்தோன்றி
முண்டா சூரனை அழித்தாய் போற்றி போற்றி.

அஞ்சிடுமேனி தோளில்
அறுத்திடு சிரத்தின் மாலை
கொஞ்சு தேசிக்காய் மாலை
குவலயங் காவல் செய்ய
வெஞ்சின நாய்மீதேறி
வளர் கையில் வாளுமேந்தி
செம்பியன்பற்றிலுள்ள
செறிபாலையடி வைரவக்கடவுள் போற்றி போற்றி.

குளவெளிகள் வயல்புலங்கள்
குளிர்தடாகங்களோடை
பழமரங்கள் பருகுதேன் செறிமரங்கள்
படர் குவளையல்லி ஆம்பல்
களவருந்து வண்டுகளோடு
காக்கை பட்சி மிருகங் கூடும்
செழிவதுறு செம்பியன்பற்றிலுள்ள
செறிபாலையடி வைரவக்கடவுள் போற்றி போற்றி.

சாருமுன்னடியாருக்காய்ச்
சண்டாள வினைகள் கொல்ல
கோருமுன் நாமஞ்சொல்லிக்
கொண்டதோர் வேள்வி கொள்ளில்
வேருடனறுத்து மன்பர்
வௌவினை போக்குந் தேவே
சாருமின் செம்பியன்பற்றுற்ற
பேர்பெறு பாலையடி வைரவக்கடவுள் போற்றி போற்றி.

அருகவே பெல்லி பேய்கள்
அண்டிய சூனியந்தான்
பெருகுமோ உடலில் நோய்கள்
பீடிக்குமாடோடாடு கோளிப் பிணிகள்
வருவதேயண்டாதோட்டும்
ஒரு காவல் தெய்வம் கண்டீர்
உருகுநல் நெல்லியானில்
உறைபாலையடி வைரவக்கடவுள் போற்றி போற்றி.


முப்பழமிளநீரே தேன்
மூதாவின் பால் கரும்போடு
ஒப்பிலா அபிசேகந்தான்
உவப்புறு சக்கரையின் பொங்கல்
தப்பிலா மடையோடு தாளம் சல்லாரி
மாப்பறை மணியோசையோடானிப் பொங்கல்
பெற்றுப் பேய் பரிகலங்களோட்டும்
பெரு பாலையடி வைரவக் கடவுள் போற்றி போற்றி.

படை சூலம் வாள் கொண்டு
பார் காக்கும் கடவுள் போற்றி
நடைபெறுமாம் நிறைமணியில்
வடையணிந்து மகிழ் தேவே போற்றி
மடை கண்டு மகிழ் கொண்டு
கலை காட்டும் கடவுள் போற்றி
விடை கொண்ட பீடையற
வினை தீர்க்கும் வைரவக்கடவுளே போற்றி போற்றி.