மான்மியம்

செம்பியன் பற்று பாலையடிவைரவர் மான்மியம்.
ஆக்கம்: பொ. தர்மகுலசிங்கம். இலண்டன் 

                                              
                                              உ   
                                   திருச்சிற்றம்பலம் 
                           
 

                                      காப்பு
செம்பியன் பற்றெனும் சிறப்புடை நற்பதியில்    
நம்பினார்க் கருள்புரியும் பாலையடி வைரவரை    
செந்தமிழ்ச் சொற்களால் சீர்பெற நான்பாட   
வந்தெனக் கருள்புரி தந்திமுகக் கடவுளே.         
                                     
                                  சரஸ்வதிதுதி
வெண்மையாய் தண்மையாய் வீணையுடன் வீற்றிருந்து  
பண்ணினால் உலகத்தைப் பக்தியொடு வழிநடத்தி   
உண்மைக் குருவகமாய் உலகத்தோர் போற்றிநிற்கும் 
வெண்தாமரைத் தாயே வேண்டினேன் நின்னருளே.  
                               
                               குலதெய்வங்கள்துதி 
சீர்பொங்கும் செம்பியன் பற்றுறை வினாயகரைச் செல்வம் செழித்தோங்கவே   
கார்த்திடும் காரையடி யம்மனை கருதிடும் பழையேந்தாப் பிள்ளையாரை  
ஆர்த்திடும் மாவடி யானைமுகத்தனை தேவதுரவையனை மருதங்கேணிக்கந்தனை 
பார்போற்றும் மானிய வளையி னுறையம்மனை பக்தியாய் வாழவைக்கும்  
ஓர்பாலில் கருமணல் பெரியதம்பிரானை ஓதியே உவந்துபாடும்   
ஊரெல்லையுற்றிட்ட கன்னிகை யம்மனை உறுதியாய்ப் பற்றிநிற்கும்  
தூர்ப்பிட்டி மேவிய கண்ணகை யம்மனை துதித்துமே பாடிநிற்கும்   
சார்புடை நாச்சிமார் தங்களை வேண்டியே சாற்றியே போற்றிப்பாடும் 
பேர்பெற்ற புன்னையடி நரசிங்க வைரவரை  புகழ்ந்துமே ஏத்திநிற்கும்   
கூர்வேலோன் சோழன் குடியிருப்பு முருகனை கூவியேபாடியாடும்   
தாருற்ற நாகர்கோவிலின் தம்பிரானையும் தாழ்ந்துமே போற்றியேற்றி   
கார்மேகக் கண்ணனாம் வல்லிபுர ஆழ்வாரைக் காத்திட வேண்டினேனே.   
                                    
                              அமைவிடம்
கற்பனைக் கெட்டாத பிரபஞ்சம் தன்னிலே கணக்கற்ற அண்டங்களில்    
சற்றுமே பிழையாது சுற்றிடும் பூமியின் சாற்றிடும் கண்டமைந்தில்  
பெற்பெரிய கண்டமாம் ஆசியக் கண்டத்தின் பேர்பெறும் இந்தியாவின் 
தெற்காக உற்றிடும் இந்துமா கடலிலே பொற்றொளி வீசிநிற்கும்      
சிற்சிறு தீவான இலங்கையின் வடபாலில் சீர்பெறும் வடமராட்சி   
நற்றமிழ் போற்றிடும் பருத்தித்துறை நகரின் பகுதியாம் கிழக்குத்திக்கில்   
சொற்றிடும் குடத்தனை அம்பனொடு கற்றோர்கள் சூழ்ந்திட்ட நாகர்கோவில்
நற்புகழ் பெற்றிட்ட குடாரப்பு கடந்திட்டால் செம்பியன் பற்றாகுமே.        

கற்பகத் தருவெனக் கற்றோர்கள் போற்றிடும் கணக்கற்ற பனைமரங்கள்
நற்செழிப் பாகவே இளநீர்க் குலைநல்கும் நல்லிளம் தென்னைமரங்கள்
தற்பெருமையாய் உயர்ந் தோங்கி வளர்ந்திட்ட தழைநிறை வேப்பமரங்கள்
சொற்கரிய மருத்துவக் குணங்கொண்ட மூலிகைகள் சூழ்ந்திட்ட நிழல்மரங்கள்   
நெற்கதி ரீண்டிடும் நெடியசெந் நெல்வயல் நிறைந்திட்ட விளைநிலங்கள்   
வற்றாத நீர்நிறை பொற்றா மரைக்குளம் பொலிந்திட்ட வளநிலங்கள்
உற்றதே செம்பியன் பற்றெனும் பகுதியில் கற்றோர்கள் சூழ்ந்துவாழும்  
வற்றாத அருள்மழை பொழிந்திடும் வைரவர் வதிந்திடும் நெல்லியானே.     

நாவிற் கினித்திடும் நாவற்பழம் நல்கும் நன்குபடர் நாவல்மரமும்
பூவிற் சிறந்திட்ட கார்த்திகைப் பூப்பூக்கும் பொலிவுமிகு காந்தள்செடியும்   
தேவியர் சூடிடும் கொத்தாக மலர்பூக்கும் தேன்சிந்தும் கண்ணிமரமும்  
சேவிக்கச் சிறந்தவா சனைகொண்ட மலர்சொரியும் சிறப்பான செருந்திர்மரமும்   
தேவிற்சிறந்த திருமால் வண்ணப்பூ மலரும் செழித்துவளர் காஞாமரமும்   
காவியத் தலைவர்கள் சூடிடும் நொச்சிமலர் கனதியாய் மலருமங்கே   
ஓவிய நாயகர் வரைந்திடக் காட்சிகள் ஓராயிர முண்டங்கே  
பாவிற்கு நாயகன் பாலையடி வைரவர் பதிசூழ்ந்த அழகுநிலமே.    
 
நெய்தலும் மருதமும் நிறைமணற் பாலையும் நிழல்சூழ்ந்த முல்லைநிலமும்     
கைகோர்த்து நிற்பது போலவே அமைந்திடும் கலப்புடை நிலப்பரப்பில்    
பொய்கைகள் பூத்திடும் செந்தா மரைமலர் பொலிந்திடும் வயல்கரையில்   
சைகையைக் காட்டியே வரவழைப்பது போன்று சாய்ந்தாடும் தென்னந்தோப்பில்   
மையமாய் வளர்ந்தநற் பாலைமரம் தன்னையே தலவிருட்ச மாகக்கொண்டு  
வையம் புகழ்ந்திடும் மணிவாசகப் பெருமான் உபதேசம் பெற்றதான  
உய்ந்துமே உயர்ந்துவளர் குருந்தமர விருட்சமும் ஓர்பாலில் நிழல்பரப்ப  
நைந்திட்டோர்க் கருள்புரிப் பாலையடி வைரவர் நயந்துமே கோவில்கொண்டார்.  


                                           வரலாறு  
செம்பியன் பற்றென்றும் சீர்சோழன் பற்றென்றும் செப்பிடும் ஊர்களோடு  
நம்மக்கள் வாழ்ந்திட்ட சோழன் குடியிருப்பும் நயந்துமே பழமைகூறும்   
எம்தமிழ்ச் சோழர்கள் ஆண்டதற் கடையாளம் இன்னுமே நிறையவுண்டு   
தம்கால ஆட்சியில் சரித்திரம் படைத்திட்ட தமிழ்ச்சோழர் ஆண்டகாலம்   
வந்திட்ட வைத்தியப் பரம்பரை யாகிய கட்டையர் கண்ணப்பனின்     
முந்திட்ட பரம்பரை சோழ அரசர்களின் முகதாவில் பணிபுரிந்தே    
இருந்திட்ட காலத்தில் வைத்தியம் சித்திக்க வைரவக் கடவுள்தன்னை  
சொந்தமாய்க் கோவிலொன் றமைத்துமே பிரதிட்டை செய்துமே போற்றிவந்தார்.   

கண்முன்னே காணுதல் போலவே வைரவர் பரிகலந் தங்களோடு     
எண்ணிய யாவையு மீட்டினர் இருவினை நோயையு மறுத்தனர்   
பண்ணிய பூசையால் பயன்கள் விளைந்தது பாட்டாளிமக்களின் வாழ்வுஉயர்ந்தது 
சொன்னபடியே பிணிதூர விலகிற்று தொழுநோய் முதற்கொண்டு வருநோயொழிந்தது   
எண்திக்கும் புகழ் ஏணிபோலேறிற்று எல்லோரும்வந்து பயன்பெற்றுச் சென்றனர்   
வன்னிமுதற்கொண்டு வடமராட்சியீறாய் முன்புள்ள அனைத்து மக்களும் வந்தனர்  
அன்றைய காலத்து அரசருமழைத்தனர் அங்குள்ளோர்க்கு வைத்தியம் பார்த்தனர்    
பண்டைய காலத்துப் பண்பாடுகுறுகிடப் பக்தியும்சற்றே பண்பின்றி மருகிற்று.        

காலங்கள் கரைந்திடக் கதைகளும் மாறிடக் கடற்கோள்கள் தன்னினாலோ      
ஞாலங்கள் குறுகிட நியாயங்கள் மாறிட நலமிலா நோயினாலோ     
கோலங்கள் மாறியே குடிகளும் குறுகியே குக்கிரா மங்களாக       
சோலைகள் கருகியே சுடுகாடு போலவே சுயநிலம் காட்சிகொள்ள     
மலைபோன்ற மணல்பரப் பெல்லாமே கலவோடு சரித்திரச் சாட்சிசொல்ல   
மழைமாரி பொய்க்கவே வயல்விளை வின்றியே வதிந்தோர்கள் விலகிச்செல்ல  
நிலை பெயராமலே சிலபே ரிருந்தனர் சிரமத்தைத் தாங்கியங்கே    
பலபேருள் ஓருவனாம் சின்னத்தம்பி யென்னும் பரம்பரை வைத்தியத்தோன்.   
 
சின்னத் தம்பியென்னும் சிறப்புடை வைத்தியன் சேவித்து வந்ததான   
வன்மைமிகு வைரவக் கடவுளும் வாழ்ந்தோர்க்கு வகையாக வரங்கள்நல்க     
இன்மையென் றில்லாது எல்லோரும் வாழவே இனியநிலங்கள் விளைய 
பொன்னாகப் போற்றிடும் தம்குல தெய்வமாம் புகலரிய வைரவன்பேர்    
சொன்னாலே பிணிநீங்கும் சூதுவாது போகும் சுகமாக வாழ்வரங்கே    
மின்னிடும் ஆனியில் பொங்கலிட்டே மடை அன்பாகச் செய்வரங்கே   
பண்ணுவர் பரணியில் கார்த்திகைத் திங்களில் பக்தியொடு பெருபூசையே  
எண்ணியே பாலையடி வைரவரை மனத்துளே இயற்றுவர் அன்னதானம்.       

சுக்கிர வாரத்தில் திருவிளக் கிட்டுமே பக்தியொடு பூசைபுரிவார்  
இக்கிரா மத்தவர் எல்லோரும் கூடியே இயல்பாகச் சேவைசெய்வார்  
வக்கிர மில்லாத வாழ்க்கையை வைரவர் மக்களுக்களித் தருள்வார் 
தக்கோர்கள் கூடியே தம்முன்னேற் றத்திற்குத் தகுதியாய்த் திட்டமிடுவார்   
மிக்கதோர் நல்வாழ்வை வேண்டியே மக்களும் விரதங்கள் மேற்கொள்ளுவார்  
சிக்கல்கள் தீருமே சிறப்புக்கள் ஓங்குமே தப்பாது மாரிபெய்யுமே  
எக்காரணம் கொண்டும் இவ்வூரில் தீமைகள் இல்லாதழிந் தொழியுமே  
உக்கிர பாலையடி வைரவர் பெயர்கூறின் ஒழியுமே துன்பங்களே. 

அன்பு பெருகவே அறநெறி சிறக்கவே இன்பமாய் மக்கள்வாழ்க    
வன்பகை மறையவே துன்பங்கள் நீங்கவே வஞ்சனைகள் நீங்கிவாழ்க   
உண்மைகள் ஓங்கிட எண்ணங்கள் சிறந்திட உயர்வாக வாழ்கவாழ்க  
மண்வளம் சிறந்திட மாரிமழை பொழிந்திட வளமாக வாழ்கவாழ்க   
கண்ணாகக் கல்வியை எண்ணியே கற்றுமே பண்போடு வாழ்கவாழ்க 
மன்னவர் செங்கோல்கள் கோடாது மக்களைக் காத்துமே வாழ்கவாழ்க  
பண்ணிடும் பூசையால் பாலையடி வைரவர் எல்லோர்க்கும் அருளவாழ்க 
பொன்னையா சுதன் தர்மகுல சிங்கம் புகன்றிட்ட கவிகள் வாழ்கவாழ்கவே.   

               திருச்சிற்றம்பலம்




              



Aucun commentaire:

Enregistrer un commentaire